"லக்சியனே மந்திரய" ஜனாதிபதியின் கைகளால் மக்களின் பாவனைக்கு

⏩ "லக்சியனே மந்திரய"  ஜனாதிபதியின் கைகளால் மக்களின் பாவனைக்கு...

⏩ 9 மாடிகள், செலவு 4000 மில்லியன் ரூபாய் ...

⏩ கம்பஹா மாவட்டத்தின் அனைத்து அரச நிறுவனங்களும் ஒரே இடத்தில்...

⏩ 1000 இருக்கைகள் கொண்ட நவீன கேட்போர் கூடம் மற்றும் 400 இருக்கைகள் கொண்ட புதிய சிற்றுண்டிச்சாலை...

⏩ ஒரு புதிய வாகனத் தரிப்பிடம்...

⏩ தினமும் 3000 - 5000 பேர் வரை சேவை வழங்கப்படும்...

கம்பஹா மாவட்ட செயலக நிர்வாக வளாகம் "லக்சியனே மந்திரய" எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (27) மாலை 4.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

1978 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கம்பஹா மாவட்ட செயலக நிர்வாக வளாகம் புகழ்பெற்ற "அக்ரா" மாளிகையில் செயற்பட்டு வருகிறது. ஆனால் தற்போது அதன் இடப்பற்றாக்குறையால் அதன் அருகில் ஒன்பது தளங்கள் கொண்ட புதிய நிர்வாக வளாகம் கட்டப்பட்டுள்ளது.

2019 மார்ச் 12 ஆம் திகதி புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. புதிய கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு 4000 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

புதிய கட்டிடத்தை திறந்து வைப்பதன் மூலம் கம்பஹா மாவட்டத்தின் பிரதான அரச நிறுவனங்கள் ஒரே இடத்திற்கு கொண்டு வரப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களையும் ஒரே இடத்திற்கு கொண்டு வருவதன் மூலம், மக்களுக்கு அதிக வினைத்திறனான சேவையை வழங்க முடியும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த புதிய நிர்வாக வளாகத்தின் அளவு 2,25,000 சதுர அடி. இதில் 1000 இருக்கைகள் கொண்ட நவீன கேட்போர் கூடம் மற்றும் 400 இருக்கைகள் கொண்ட புதிய சிற்றுண்டிச்சாலை மற்றும் புதிய வாகனத் தரிப்பிடம் ஆகியவை அடங்கும்.

கம்பஹா பிரதேச செயலக அலுவலகம், மாவட்ட தொழிலாளர் அலுவலகம், மாவட்ட சமுர்த்தி அலுவலகம், பிரதி தபால் மா அதிபர் அலுவலகம், மாவட்ட திட்டமிடல் செயலக அலுவலகம், நகர அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட காரியாலயம் உள்ளிட்ட 28 பிரதான அரச நிறுவனங்கள் இந்த வளாகத்தினுள்  அமையவிருக்கின்றன.

இந்த நிறுவனங்களில் இருந்து பல்வேறு சேவைகளைப் பெற தினமும் 3000 - 5000 பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


முனீரா அபூபக்கர்

கருத்துகள்