⏩ நிர்மாணத் தொழிலில் ஈடுபட்டுள்ள 13 இலட்சம் நிர்மாணத் தொழிலாளர்களைப் பாதுகாப்பது அமைச்சின் பொறுப்பு...
⏩ இலங்கையில் வீழ்ச்சியடைந்துள்ள நிர்மாணத் தொழிலுக்கு புத்துயிர் அளிப்பதற்கான திட்டங்களை அமைச்சு ஏற்கனவே தயாரித்துள்ளது...
- நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர்
நிர்மாணத் தொழிலில் ஈடுபட்டுள்ள 13 இலட்சம் நிர்மாணத் தொழிலாளர்களைப் பாதுகாப்பது அமைச்சின் பொறுப்பாகும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எஸ். திரு.சத்யானந்தா தெரிவித்தார்.
கோவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக வீழ்ச்சியடைந்த இலங்கையின் நிர்மாணத் துறையை புத்துயிர் பெறுவதற்கான திட்டங்களை தனது அமைச்சு ஏற்கனவே தயாரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்நாட்டின் நிர்மாணத்துறையை உயர்த்துவதற்கு நிதி மற்றும் நிதி சார்பற்ற தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்றார்.
காலி, வக்வெல்லவில் அமைந்துள்ள தென் மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இன்று (4) நடைபெற்ற சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஒப்பந்ததாரர்களின் நிர்மாணப் பிரச்சினைக்குத் தீர்வு தொடர்பான காலி மாவட்ட ஆலோசனை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அமைச்சின் செயலாளர் இதனைத் தெரிவித்தார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பேரில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை (CIDA), தேசிய கட்டுமான சங்கம் மற்றும் இன்சி சீமெந்து நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த ஆலோசனை சேவையை ஏற்பாடு செய்தன.
உள்ளூர் சிறிய மற்றும் நடுத்தர ஒப்பந்ததாரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதன் மூலம் அவர்களை பலப்படுத்துவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இலங்கையில் நிர்மாணத் துறையின் கட்டுப்பாட்டாளர் என்ற வகையில், 2014 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க நிர்மாண கைத்தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் ஒப்பந்தக்காரர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை கையாள்கிறது.
இலங்கையின் நிர்மாணத்துறையானது நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்காற்றுகின்றது. ஆனால் கோவிட் தொற்றுநோய் நிலைமை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த காலங்களில் நிர்மாணத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. நாடு எதிர்நோக்கும் பொருளாதாரச் சிக்கல்களால் ஒப்பந்ததாரர்கள் தங்களது திட்டங்களை நிறைவேற்ற முடியாமல், தங்களின்
சர்ச்சைகளைத் தீர்க்க முடியாமல் தவித்து வருகின்றனர். அதன்படி, நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை அவர்களின் சர்ச்சைகளைத் தீர்ப்பதற்காக இந்த ஆலோசனை நிகழ்ச்சியை இலவசமாக நடத்தியது.
இங்கு, கட்டுமானதக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை திறமையான நிர்மாணத் தொழிலாளர்களுக்கு நிர்மாணத்துறை அடையாள அட்டை வழங்க, பதிவுகளும் செய்யப்பட்டன.
நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஆர். எச். ருவினிஸ், பணிப்பாளர் நாயகம் சஞ்சீவ ஜயசுந்தர, தென் மாகாண பிரதம செயலாளர் எஸ். அழககோன், துணைத் தலைமைச் செயலாளர் ஏ. ரணசிங்க, காலி மாவட்ட செயலாளர் சாந்த வீரசேகர, தேசிய நிர்மாண சங்கத்தின் தலைவர் டேரிங்டன் போல், இன்சி சீமெந்து நிறுவனத்தின் வெளி உறவுகள் மற்றும் வர்த்தக அபிவிருத்தி தலைவர் சந்தன நாணயக்கார மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்துரையிடுக