நாளை கஹட்டோவிட்டவில் கல்வி விழா

மேல் மாகாணத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்ற முஸ்லிம் மாணவ மாணவியர்களுக்கான கௌரவிப்பும் பரிசளிப்பு விழாவும் நாளை (12) ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணிக்கு கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்க்கிள் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு கொழும்பு முஸ்லிம் கல்வி முன்னேற்ற சங்கம் மற்றும் கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்க்கிள் ஆகியன இணைந்து நடாத்தவுள்ளன.

கம்பஹா, கொழும்பு , களுத்துறை போன்ற மேல் மாகாண மாவட்டங்களில் இருந்து சுமார் 125 மாணவ மாணவியர்கள் இதற்காக விண்ணப்பித்திருக்கிறார்கள். அவர்களுக்கான அழைப்பிதழ் கடிதங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

கொழும்பு முஸ்லிம் கல்வி முன்னேற்ற சங்கம் 11 ஆவது தடவையாக நடாத்தும் இந்நிகழ்வு பற்றியும் அது கடந்து வந்த பாதை, ஆரம்ப வரலாறு பற்றியும் அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளருமான எம்.இஸட். அஹமட் முனவ்வர் குறிப்பிடும் போது, 

கொழும்பு முஸ்லிம் கல்வி முன்னேற்ற சங்கம் 2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் கட்டுப்பாட்டாளராக இருந்த காலகட்டத்தில் அப்போது எனக்கு 
சிந்தனையொன்று ஏற்பட்டது.  அதாவது  படிக்கும் மாணவர்கள் நிறையப் பேர் வசதி இல்லாமல் இருக்கின்றார்கள். அவர்களுக்கான வழிகாட்டல் மற்றும் பொருளாதார 
உதவி ஆகியவற்றின் தேவை உணர்ந்துதான் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

5 பேரை மாத்திரம் கொண்ட அமைப்பாக முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கம் - கொழும்பு என்ற பெயரில்  இச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. 

இந்த சங்கம் தீர்மானித்தபடி இதன் ஆரம்பகால அங்கத்தவர்களாக  தலைவராக நானும் செயலாளராக அப்துல் லத்தீப், பொருளாளராக நஸீர் அப்துல் லத்தீப் மற்றும் எம்.எச்.எம். முஸாதிக், சிப்லி ஹாஷிம் ஆகியோர் அங்கத்துவம் பெற்று இதனை அமைத்தோம்.  

சில அங்கத்தவர்கள் இது முதலாவது விழா என்ற அடிப்படையில் ஒன்பது ஏ பெற்றவர்களைப் பாராட்ட வேண்டும் என்று 2007ஆம் ஆண்டு இடம்பெற்ற சாதாரண தரப் பரீட்சையில் முழு இலங்கையிலும் இருந்து 35 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். 

இவ்விழா கொழும்பு முஸ்லிம் லேடிஸ் மண்டபத்தில் அதாவது விஜேவர்தன மாவத்தை முஸ்லிம் லேடிஸ் ஸ்டடி சேர்க்கிள் மண்டபத்தில் இடம்பெற்றது. 

அவ் விழாவில் அதிதிகளாக இம்முறை இடம்பெறும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளும் தென்கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அப்போதைய வேந்தர் மர்ஹும் ஏ.ஜீ. ஹுஸைன் இஸ்மாயீல், ஜாமிஆ நளீமியாவின் இன்றைய முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.சீ. அகார் முஹம்மட் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்த முதலாவது விழா 2008ஆம் ஆண்டு இடம்பெற்றது. அதன் பிறகு அடுத்தடுத்த ஆண்டுகளில் பாராட்டப்படும் மாணவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது. 
 
2009 ஆம் ஆண்டு 55 மாணவர்கள், 2010 ஆம் ஆண்டு 85 மாணவர்கள், 2011 ஆம் ஆண்டு 105 மாணவர்கள், 2012 ஆம் ஆண்டு 135 மாணவர்கள், 2013 ஆம் ஆண்டு 198 மாணவர்கள், 2014 ஆம் ஆண்டு 265 மாணவர்கள், 2015 ஆம் ஆண்டு 195 மாணவர்கள், 2016 ஆம் ஆண்டு 200 மாணவர்கள், 2017 ஆம் ஆண்டு 348 மாணவர்கள் என்று  
இப்படியே கூடிச் சென்று 2018ஆம் ஆண்டு உயர்நிலையை அடைந்தது. 

2018 ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்யப்பட்ட மிகப் பெரும் விழா மிகவும் 
கோலாகலமாக கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

இதில் பிரதம அதிதிகளாக கொழும்பு சாஹிராக் கல்லூரியின் அதிபர் றிஸ்வி மரிக்கார், சிங்கப்பூர் எழுத்தாளர், கலைஞர்,  சிந்தனையாளர், புதிய நிலா மு. ஜஹாங்கிர்,  அன்றைய மாத்தறை நூராணியா அறபுக் கல்லூரியின் பணிப்பாளரும் இப்போதைய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளருமான அஷ்ஷெய்க் அல்ஹாபிழ் அர்கம் நூராமித் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
 
முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியூதீன் போன்றோர் அனுசரணை வழங்கி இருந்ததோடு,  முஸ்லிம் சமூகத்தின் தனவந்தர்கள் பலரும் நிதி தந்து அனுசரணை வழங்கி ஒவ்வொரு வருடமும் தட்டிக் கொடுக்கிறார்கள்.

இவ்வாண்டும் இவ்விழாவை நாடாத்துவதற்கு, மாணவர்களின் நிதி உதவியைத் தருவதற்கு கொழும்பில் பிரபலமான தனியார் தொலைபேசி நிறுவனமான ட்ரான்ஸ் ஏசியா செல்லூலர் பிரைவேட் லிமிடெடின் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான பிஸ்ருல் முபீல், அதன் துணைத்தலைவர் முகர்ரம் ஆகியோர் முன்வந்துள்ளனர். 

நாட்டின் பொருளாதாரம், மக்களுடைய ஆதரவு, வருமானம் இவற்றை மையமாகக் கொண்டு நான்கு வருடங்களின்  பின்னர் இம்முறை 11ஆவது வருடமாக இவ்விழாவை நடாத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இவ்விழா எனது தலைமையில் சங்கத்தின் செயலாளர் எஸ்.எம்.ஹிஸாம், பொருளாளர் பஷீர் லத்தீப், உதவிச் செயலாளர் எம்.ஐ.எம். இப்திகார், துணை அமைப்பாளர் முஹம்மட் சியாஸ்,  உதவிப் பொருளாளர் சிப்லி ஹாஷிம் ஆகியோர் முன்னின்று இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். 

கடந்த 10 வருடங்களாக வழங்கி வந்த சான்றிதழ், பதக்கம், பொற்கிலி,  பாராட்டு என்பன இம்முறையும் தெரிவு செய்யப்பட்ட அனைவருக்கும் வழங்கப்படவுள்ளன. 

அத்துடன் தெரிவு செய்யப்பட்ட 125 பேரும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்படவுள்ளார்கள். இதில் 85  மாணவிகளும் 45 மேற்பட்ட மாணவர்களும் அடங்குகின்றனர்.

நாளை (12) நடைபெற இருக்கும் இவ் விழாவிற்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக வேந்தராக நியமனம் வழங்கப்பட்ட பிரபல்ய ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா பிரதம அதிதியாகவும், டாக்டர் ஷாபி சிஹாப்தீன் கௌரவ அதிதியாகவும் ,  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயலாளர் அஷ்ஷெய்க் அல்ஹாபிழ் அர்கம் நூராமித் சிறப்புப் பேச்சாளராகவும் தொழிலதிபர் எம்.வை.எம்.பிஸ்ருல் முபீல், கொழும்பு  ஸாஹிராக் கல்லூரி அதிபர் ஏ.ஆர்.எம். றிஸ்வி மரிக்கார் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் தொழிலதிபர் எம்.வை.எம்.முகர்ரம், பேராசிரியர் எம்.ஜே.எம்.ராசி, அபிவிருத்திக்கும் பயிற்சிக்குமான இலங்கை நிறுவனத்தின் செயலாளர் அஷ்ஷெய் எஸ்.எல். நௌபர், தொழிலதிபர் ஆர்.பாலசுப்ரமணியம், மூஷான் இன்டர்நேஷனல் தவிசாளர் முஸ்லிம் ஸலாஹுத்தீன் ஆகியோர்  சிறப்பு அதிதிகளாகவும் மற்றும் சமூகத்தின் கொடை வள்ளல்கள், தனவந்தர்களும் கலந்து கொள்கின்றனர்.

விஷேடமாக கொழும்பு ஸாஹிரா கல்லூரி பேண்ட்  வாத்தியங்களுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும் இந்நிகழ்வில் கஹடோவிடவின் சமூக முன்னோடி வள்ளல் மர்ஹும் மதனி ஹாஜியார் ,மற்றும் கஹடோவிட முஸ்லிம் லேடீஸ் ஸ்தாபகச்செயலாளர் முன்னாள் அதிபர் மர்ஹும் ஏ.ஏ.எம். ஜுனைத் ஆகியோர் பெயரில் அரங்குகள் நடைபெறும்.

கஹட்டோவிட்டவின் பெருமக்கள், படித்தவர்கள் மற்றும் சமூக சேவகர்கள் உட்பட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்க்கிள் அங்கத்தினர்களின் ஒத்துழைப்புடன் இடம்பெறும் இவ்விழாவுக்கு அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.