“ஓவல் வியூ ரெசிடன்சீஸ்” வீடமைப்புத் திட்டத்தின் பயனாளிகளுக்கு வீட்டுரிமைப் பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!

⏩ பொரளை  “ஓவல் வியூ ரெசிடன்சீஸ்” என்ற அரச ஊழியர் வீடமைப்புத் திட்டத்தில் உள்ள வீட்டுப் பயனாளிகளுக்கு வீட்டுரிமைப் பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. 


நேற்று (30) நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திரு.நிமேஷ் ஹேரத் தலைமையில் பத்தரமுல்லை, செத்சிறிபாயவில் அமைந்துள்ள அதிகார சபையில் ஆரம்பிக்கப்பட்டது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களில் வசிப்பவர்களுக்கு உரிமைப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விஞ்ஞாபனத்தில் அரச அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு உடனடியாக வீட்டு உரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொரளை “ஓவல் வியூ ரெசிடன்சீஸ்” அரச ஊழியர் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 10 வீட்டுப் பயனாளிகளுக்கு வீட்டுரிமைப்; பத்திரம் வழங்கப்பட்டதோடு, ஏனைய வீட்டுப் பயனாளிகளுக்கு உடனடியாகப் உரிமைப் பத்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திரு.நிமேஷ் ஹேரத் தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் 2016 ஆம் ஆண்டு இந்த அரச ஊழியர் வீடமைப்புத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு நிர்மாணப் பணிகளை நிறைவு செய்யப்பட்டது. இங்குள்ள மொத்த வீடுகளின் எண்ணிக்கை 608. இந்த வீட்டுத் திட்டம் 24 மாடிகளைக் கொண்டுள்ளது.

678 சதுர அடியில் (2 அறைகள்) ஒரு வீடு 85 இலட்சம் ரூபாய் ஆகும். 850 சதுர அடியை உடைய வீடு (3 அறைகள்) 107 இலட்சம் ரூபாயும் 880 சதுர அடியில் (3 அறைகள்)  கொண்ட வீடு 111 இலட்சம் ரூபாயும் ஆகும். அரச ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் 10 இலட்சம் ரூபாய் கொடுத்து மீதமுள்ள தொகையை 3 ஆண்டுகளில் செலுத்தும் அடிப்படையில் இங்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, பிரதி பணிப்பாளர் நாயகம் (சொத்து மற்றும் காணி முகாமைத்துவம்) ஈ.ஏ.சி. பிரியசாந்த, பணிப்பாளர் (வீடமைப்பு) எம்.எச்.வி. குமார் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.  
 
(முனீரா அபூபக்கர்)                                                                                                                   

கருத்துகள்