FIFA உலகக் கிண்ணம் - பெண் ரசிகைகளுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகள்; மைதானங்களில் மது விற்பனைக்கு தடை !

கட்டார் நாட்டின் விதிமுறைகளை மீறி உதைபந்து ரசிகைகள் ஆடை அணிந்து வந்தால் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. 22 ஆவது FIFA உலகக்கிண்ணத் தொடர் நாளைய தினம் ஆரம்பமாகும் நிலையில், போட்டிகளை நேரில் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில், பெண் ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுவாக போட்டிகள் நடைபெறும் மேற்குலக நாடுகளில் உடை கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. அங்கு பெண்கள் தங்கள் விருப்பப்படி ஆடைகள் அணிந்துகொண்டு மைதானத்திற்கு வருவார்கள். சில முறை போட்டியில் கொண்டாட்டத்தை வெளிப்படுத்த ஆண், பெண் ரசிகர்கள் ஆடைகளைக் கழற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும் நிகழ்வதுண்டு.

இந்நிலையில், கட்டாரில் அதற்கு அனுமதி இல்லை. போட்டியை காணவரும் ரசிகர்கள் நாட்டின் விதிகளை மதிக்கும்படி கண்ணியமான உடைகளை அணிந்து வர வேண்டுமென விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கட்டாரில் பெண்கள் பொது வெளியில் தங்கள் அங்கங்களை காட்டும்படி உடை அணிந்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

எனவே, மைதானத்திலோ வெளியே சுற்றிப் பார்க்கும்போதோ ரசிகர்கள் நாட்டின் ஆடை கட்டுப்பாடுகளை மதித்து செயல்பட வேண்டும். மீறினால் அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மைதானங்களில் ரசிகர்களை கண்காணிக்க உயர் நவீன கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலகக் கிண்ணப்  போட்டி நடைபெறும் எட்டு மைதானங்கள் எவற்றிலும் ரசிகர்கள் மது வாங்க அனுமதியில்லை எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.