தென்கிழக்குப் பல்கலையில் மருத்துவபீடம்!

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடமொன்றை உருவாக்குவதே எனது பிரதான இலக்கு என தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தெரிவித்தார். 
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது வேந்தராக நியமிக்கப்பட்டிருக்கும் பிரபல சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அடுத்த ஐந்தாண்டுக்கான வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த வாரமளவு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்யவுள்ள வேந்தர், தமது பிரதான இலக்கு பற்றி நியூஸ் பிளஸ்ஸூக்கு விளக்கமளித்தார். 
தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு ஒரு மருத்துவபீடம் கட்டாயம் தேவை. இதனை உருவாக்கும் பணிகளை நான் இப்போது ஆரம்பித்துள்ளேன். இன்னும் சில நாட்களில் இலங்கைக்கு வரவுள்ள முஸ்லிம் நாடுகளின் பல்கலைக்கழகத்தின் உபவேந்தரோடும் உரையாடவுள்ளேன். அத்தோடு அரசாங்கத்தோடும் உரையாடி வெளிநாட்டு உதவிகளையும் பெற்று இந்த மருத்துவபீடத்தை உருவாக்க செயற்பட்டு வருகிறேன். மருத்துவபீடத்துக்குத் தேவையான போதனா வைத்தியசாலையாக முன்னாள் ஆளுனரான ஹிஸ்புல்லாவினால் நிர்மாணிக்கப்பட்ட பல்கலைக்கழக கட்டிடத்தை பெறுவது தொடர்பாகவும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன் என்றும் வேந்தர் பாயிஸ் முஸ்தபா தெரிவித்தார்.

கருத்துகள்