திருகோணமலை மாவட்டத்தில் மேலும் மூன்று புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டும் - இம்ரான் மஹ்ரூப்

 


திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள 11 பிரதேச செயலக பிரிவுகளின் கிராம சேவகர் பிரிவின் எண்ணிக்கையினையும், சனத்தொகையின் எண்ணிக்கையினையும் குறிப்பிட்டு திருகோணமலை மற்றும் கிண்ணியா பிரதேச செயலக பிரிவுகளில் தலா  ஒரு நகர சபையும், ஒரு பிரதேச சபையும் காணப்படுகின்றது எனவும் அப்புள்ளி விபரங்களை பார்க்கும் பொழுது திருகோணமலை மாவட்டத்தில் மேலும் மூன்று புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவை உப பிரதேச செயலகமாக இயங்கி வரும் தோப்பூர் உப பிரதேச செயலகத்தினை பிரதேச செயலகமாக தரமுயர்த்துவதுடன், கிண்ணியா பிரதேச செயலக பிரிவில் கிண்ணியா பிரதேச சபையினை உள்ளடக்கிய பகுதியினை தனியான பிரதேச செயலக பிரிவாகவும், திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச சபை பகுதியில் ஒரு பிரதேச செயலக பிரிவும் புதிதாக உருவாக்கப்பட வேண்டும் என பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண கபைகள் உள்ளூராட்சி, விளையாட்டுத்துறை அமைச்சு சம்பத்தமான குழுநிலை விவாதத்தில் பாராளுமன்றில் உரையாற்றும் போது கௌரவ. இம்ரான் மகரூப் (பா உ) அவர்கள் தெரிவித்தார்.

மேலும், திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலக பிரிவுகளும், தோப்பூர் உப  பிரதேச செயலக பிரிவும் காணப்படுகின்றது.

1975ஆம் ஆண்டுக்கு முன்னர் 11 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்ட கொட்டியரப்பற்று பிரதேச செயலகம் காணப்பட்டது. அதிலிருந்து தெஹிவத்தை மற்றும் சேருவில கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி சிங்கள மக்களுக்காக சேருவில பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டு, ஏனைய 9 கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கி மூதூர் பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டது என்றும் அதன் பின்னர் 1998ஆம் ஆண்டு மூதூர் பிரதேச செயலக பிரிவிலிருந்து  ஈச்சிலம்பற்று கிராம சேவகர் பிரிவினை மாத்திரம் பிரித்து  தமிழ் மக்களுக்காக வெருகல் பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டது ஆனால் , 

1975ஆம் ஆண்டுக்கு முன்னர் 11 கிராம சேவகர் பிரிவாக இருந்த பகுதியிலிருந்து வெறும் 03 கிராம சேவகர் பிரிவுகளை பிரித்து இரண்டு பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன, ஏனைய 08 கிராம சேவகர் பிரிவுக்கு ஒரு பிரதேச செயலகம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது,

தற்பொழுது மூதூர் பிரதேச செயலக பிரிவில் 42 கிராம சேவகர் பிரிவுகள் காணப்படுகின்றன.

தோப்பூருக்கு தனியான பிரதேச செயலகம் வேண்டும் என்ற கோரிக்கை  எனது தந்தை காலம்சென்ற M.E.H. மகரூப் அவர்கள் இராஜாங்க அமைச்சராக இருந்த காலத்தில்  1989ஆம் ஆண்டில் அவரினால் ஆரம்பிக்கப்பட்டது.

2007ஆம் ஆண்டு முதல் 12 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி தோப்பூர் உப பிரதேச செயலகமாக இயங்கி வருகின்றது.

நாட்டில் புதிய பிரதேச  செயலகங்களை உருவாக்குவதற்காக இதுவரை ஐந்து எல்லை நிர்ணய ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன அவை அனைத்திலும் தோப்பூர் தனி பிரதேச செயலகத்திற்கான கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

 

தோப்பூர் உப பிரதேச செயலகம் உருவாக்கப்பட்ட பின்னர் நாட்டில் இரண்டு முறை புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் தோப்பூர் உள்ளடக்கப்படவில்லை என்பதனை வேதனையுடன் இச்சபையில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இத்தனைக்கும்  தோப்பூர் என்பது மிகப்பழமையான பிரதேசம் ஆகும். அதற்கு இரண்டு உதாரணங்களை கூறுகின்றேன்

01. ஆங்கிலேயருக்கு எதிராக போராட்டம் நடந்த காலத்தில் கிழக்கு மாகாணத்திலிருந்து அவர்களுக்கு எதிராக போராடிய ஏழு வீரர்களில் சேகு தீதி என்ற வீரரும் ஒருவர் அவர் தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

02. அப்போதைய ஆங்கில ஆளுநர் ரொபட் நொக்ஸ் (Robert Knox) மூதூருக்கு விஜயம் செய்த பொழுது தோப்பூர் என்ற பிரதேசம் இருந்ததாக தனது வரலாறு நூலொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பழமையான பிரதேசம் இன்னும் உப பிரதேச செயலகமாகவே இருந்து வருகின்றது இதற்கு பின்னர் உருவாக்கப்பட்ட பல பிரதேசங்கள் தனி பிரதேச செயலகங்களாக மாறியுள்ளன என்பதனையும் இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன் எனவும் அவரது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

கருத்துகள்