நாட்டின் பழமையை பிரதிபலிக்கும் வரலாற்று சான்றுகளாய் அமைந்து, இன்று மனதிற்கு நிம்மதியினை தரும் மத ஸ்தலங்களாகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் சுற்றுலாத்தளங்களாகவும் விளங்குகின்ற நாட்டின் புராதன மரபுரிமை சின்னங்கள் நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனினாலும் பேணிப்பாதுகாக்கப்படவேண்டிய சொத்துக்களாகும்.
புராதன வஸ்த்துக்கள் எனும்பொழுது அவை மத ஸ்தலங்கள், தூபிகள், விகாரைகள், நீர் தடாகங்கள், சிலைகள், ஓவியங்கள், குளங்கள், சிதைவுற்ற கட்டிடங்கள் என பல வடிவங்களில் அமையப்பெற்று இன்று வரை பாதுகாத்து வரப்படுகின்றன.
தனது பெருமையினை பறைசாட்டும் வகையில் நூற்றுக்கும் அதிகமான புராதன மரபுரிமை சின்னங்களை தன்னகத்தே கொண்ட இலங்கை நாட்டில் காணப்படும் பல நூற்றாண்டுகால வரலாற்றுக்களை கொண்ட புராதன வஸ்த்துக்களில் இஸ்லாம், இந்து மத கலாச்சாரங்களை பிரதிபலிக்கின்ற வஸ்த்துக்கள் காணப்பட்டாலும் அவற்றுள் அதிகளவானவை பௌத்த மத கலாச்சாரங்களை பிரதிபலிப்பனவாகவே காணப்படுகின்றன.
சுமார் இரண்டு கோடி மக்கள் வாழும் இலங்கை நாட்டில் பெரும்பான்மையாக பௌத்தர்களும், சிறுபான்மையகாக முஸ்லிம், இந்து, கிறிஸ்தவ மதங்களை பின்பற்றுபவர்களும் வாழ்ந்து வருகின்றனர். இலங்கைக்கென நிலையானதொரு மதக்கொள்கை காணப்படாத சந்தர்ப்பத்தில் கி.மு. 4 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து இலங்கையை வந்தடைந்த இந்திய மன்னன் அசோகா சக்கரவர்த்தியின் புதல்வரான மகிந்த தேரர் அவர்களினால் அக்காலப்பகுதியில் இலங்கையை ஆண்டுகொண்டிருந்த தேவநம்பிய தீசன் அரசனுக்கு பௌத்த மதம் போதிக்கப்பட்டு இலங்கையில் பௌத்தம் பரவ ஆரம்பித்தது. பிற்பட்ட காலங்களில் இலங்கையில் பெரும்பான்மையான மக்கள் பௌத்த மதத்தையே ஏற்று வாழ்ந்து வந்தனர். இதன் காரணமாகவே இன்று நாட்டில் காணப்படும் பண்டைய புராதன வஸ்துக்களில் அதிகளவானவை பௌத்த மத கலாச்சாரத்தை பிரதிபலிப்பவையாக காணப்படுகின்றன.
இப்புராதன வஸ்த்துக்கள் நாட்டின் இன ஐக்கியத்தில் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றன?, அவை எவ்வின மக்களுக்கு உரித்தானவை? என்பது குறித்து புராதன வஸ்த்துக்களில் ஒன்றாகவும், பௌத்தர்களின் முக்கிய வணக்கஸ்தளங்களில் ஒன்றாகவும் விளங்குகின்ற அனுராதபுரம் ருவன்வெளிசாயவின் விகாராதிபதி பல்லேகம ஹெமரத்தன தேரர் இவ்வாறு விளக்குகிறார்.
“அனுராதபுரம் என்பது வரலாறுகள் நிறைந்த ஒரு புராதன நகரமாகும். அதன் சான்றாக இங்கு பண்டையகால புராதன வஸ்த்துக்கள், சிதைவுகள் நிரம்பி காணப்படுகின்றன. இங்கே காணப்படுகின்ற இப்புராதன வஸ்த்துக்கள் அனைத்தும் பௌத்தர்களின் மத கலாச்சாரங்களை பிரதிபலித்து நிற்பதனால் தான் இந்த அனுராதபுர நகரம் பௌத்தர்களின் இதயம் என அழைக்கப்படுகின்றது. நாட்டு மக்களுக்கு குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால் அனுராதபுரத்தில் காணப்படும் இப்புராதன வஸ்த்துக்கள் பௌத்த மதத்தை பிரதிபலிக்கக்கூடியனவாக இருந்தாலும் அவை பௌத்தர்களுக்கு மாத்திரம் உரித்தனதொரு சொத்தல்ல. மாறாக இலங்கை நாட்டின் சகல இன மக்களுக்கும் உரித்தானதொரு நம் நாட்டின் சொத்துக்களாகும்.
ஒரு இனத்துக்கோ அல்லது மதத்திற்கோ மட்டும் இவை எல்லைப்படுத்தப்பட்டவை கிடையாது. நாட்டின் சகல இன மக்களுக்கும் இப்புராதன மரபுரிமை சின்னங்களாக விளங்குகின்ற இடங்களுக்கு விஜயம் செய்யக்கூடிய வாய்ய்ப்புக்கள், உரிமைகள் இருக்கின்றது. இவ்விடங்களுக்கு கௌரவமான முறையில் விஜயம் செய்து பார்வையிட்டு இப்புராதன வஸ்த்துக்கள் பற்றி அறிந்துகொள்ள முடிவதோடு எமது வாழ்க்கையில் நாம் எடுத்தொழுக வேண்டிய பல பாடங்களையும் இவை எமக்கு கற்றுத்தரும்”
ருவன்வெளிசாயவின் விகாராதிபதி பல்லேகம ஹெமரத்தன தேரர் அவர்களின் கருத்துக்களுக்கமைய நம் நாட்டில் காணப்படும் புராதன வஸ்த்துக்கள் நம் நாட்டின் சகல இன மக்களுக்கும் உரித்தானதொரு சொத்து என்பது உறுதியாகின்றது. இப்புராதன மரபுரிமை சின்னங்களில் மறைந்துள்ள இன ஒற்றுமை குறித்தும், அவற்றை சமூகத்திற்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு இன ஒற்றுமையினை உருவாக்குவதில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருப்பவருமான தொல்பொருள் திணைக்களத்தின் முன்னாள் ஆராய்ச்சி உத்தியோகத்தராக பணியாற்றிய முஸ்லிம் இனத்தை சேர்ந்தவரான ஜெ.எம்.மொஹிதீன் அவர்கள் இவ்வாறு விளக்குகிறார்.
“தொல்பொருள் திணைக்களத்தில் பணியாற்றிய காலப்பகுதியில் நான் அவதானித்த விடயங்களை வைத்து பார்க்கும்பொழுது இலங்கையில் வாழுகின்ற சகல இன மக்களையும் ஒற்றுமைப்படுத்துகின்ற சான்றாக இத்தொல்பொருள் சான்றுகள் விளங்குகின்றன. தொல்பொருள் சான்றுகளில் மிக முக்கியமானதொரு நூலாக மகாவம்சம் காணப்படுகின்றது. அதனை கற்பதின் ஊடாக பழங்கால வரலாற்றை அறிந்துகொள்ள முடிவதோடு மூவின மக்களை ஒற்றுமைப்படுத்தக்கூடிய விடயங்கள் பலவற்றை இம்மகாவம்சம் உள்ளடக்கியிருப்பதனையும் அறிந்துகொள்ள முடியும்.
தொல்பொருள் மரபுரிமை சின்னங்கள் குறித்து தேடியறிவதன் மூலம் இன ஒற்றுமையினை ஏற்படுத்த முடியும் என்ற விடயம் தொடர்பில் நான் பாடசாலை மாணவர்கள் பலருக்கும் விளக்கியிருக்கின்றேன். அதாவது அனுராதபுரம், பொலன்னறுவை, கண்டி, கேகாலை, குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு சென்று அங்குள்ள மாணவர்களுக்கு விசேட கருத்தரங்குகளை நடத்தி அவர்களுக்கு இலங்கையின் புராதன வஸ்த்துக்கள் உறுதியாக கூறி நிற்கும் இன ஒற்றுமைகள் குறித்து தெளிவு பட விளக்கியிருக்கின்றேன். அம்மாணவர்களில் பலர் அது பற்றி விளங்கி, ஆர்வம் கொண்டு எமது நாட்டில் இன ஒற்றுமையினை ஏற்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி செயல்பட்டதோடு இன ஒற்றுமையினை நிலை நாட்டிய பல சந்தர்ப்பங்களையும் நான் அவதானித்து இருக்கின்றேன். அவர்கள் வரலாற்று தொல்பொருள் சான்றுகளை அவற்றுக்கு ஆதாரமாக பயன்படுத்தியதை இட்டு நான் பெருமை படுகிறேன். இம்மாணவர்களின் செயற்பாட்டினை அவதானித்ததன் ஊடாக புராதன மரபுரிமை சின்னங்களின் ஊடாக இன ஐக்கியத்தை உருவாக்கும் செய்லபாடனது வெற்றிப்பாதையில் செல்வதாக உணர்கிறேன்”
நாட்டில் இனவாதப்பிரச்சினைகள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் காணப்பட்டாலும் அவற்றுள் பிரதானமான காரணம் ஏனைய இனத்தவர்கள் பற்றியும், அவர்களது வாழ்க்கை முறை, மத கலாச்சாரங்கள் பற்றியும் போதிய அறிவும், தெளிவும் இன்மையே. மதங்களை பிரதிபலிக்கின்ற புராதன மரபுரிமை சின்னங்கள் அமையப்பெற்றுள்ள இடங்களுக்கு விஜயம் செய்வதின் ஊடாக அப்புராதன சின்னம் பிரதிபலிக்கின்ற இன மக்கள் குறித்து ஓரளவு தெளிவு கிடைப்பதினால் மதங்கள், இனங்களுக்கு இடையில் ஏற்படுகின்ற பிளவுகளை குறைத்துக்கொள்ளக்கூடிய வாய்ப்பும் இருக்கின்றது.
எனவே, இலங்கை பிரஜைகளாகிய நாங்கள் சுற்றுலாவாக எமது நாட்டின் புராதன வஸ்த்துக்களை தேடிச்சென்று பார்வை இடுவதுபோல், மத கலாச்சாரங்களை பிரதிபலிக்கின்ற புராதன மரபுரிமை சின்னங்கள் அமையப்பெற்றுள்ள இடங்களையும் நாடிச்செல்வதின் ஊடாக அப்புராதன வஸ்த்துக்கள் பிரதிபலிக்கின்ற இனம், மதம் தொடர்பில் தெளிவினை பெற்றுக்கொள்ள முடிவதால் சகல இன மக்களையும் மதித்து செயல்படக்கூடிய பக்குவத்தை எம்மில் ஏற்படுத்தி நாட்டில் சமாதானமும், ஐக்கியமும் நிறைந்த ஒரு சூழலை உருவாக்கிட வழிவகுக்க முடியும் என்பதோடு நமது நாடும் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி நகரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
ஊடகவியலாளர் ஐ.எம்.மிதுன் கான்
கனேவல்பொல
கருத்துரையிடுக