ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று டேராடூனில் நடந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ஹஸ்ரத்துல்லா ஷாஷை, உஸ்மான் கனி ஆகியோர் களமிறங்கினர். இருவரும் முதலில் இருந்தே அயர்லாந்து அணி பந்துவீச்சை மைதானத்தில் நாலாபுறமும் சிதறடித்தனர். முதல் விக்கெட்டாக உஸ்மான் கனி 73 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹஸ்ரத்துல்லா சரவெடியாக வெடித்தார். அவர் 62 பந்துகளில் 16 சிக்சர், 11 பவுண்டரி என அடித்து 162 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இறுதியில், ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளது.
இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரும்j கேப்டனுமான பால் ஸ்டிர்லிங் 50 பந்தில் 91 ரன் எடுத்து அவுட்டானார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதைத்தொடர்ந்து 84 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷீத் கான் 4 ஓவரில் 25 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
(மாலை மலர்)
கருத்துரையிடுக