( மினுவாங்கொடை நிருபர் )
வேகக் கட்டுப்பாட்டை மீறிப் பயணிக்கும் பஸ் வண்டிகளின் அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதிக வேகத்துடன் பயணிப்பதனால் ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க மல்லிமாரச்சி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி, சிலாபம் - மஹாவெவ பகுதியில் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர்.
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ்ஸொன்று, வீதியை விட்டும் விலகி மின்மாற்றி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளாகியது.
இந்தச் சம்பவத்தில், குறித்த பஸ் வண்டி அதிக வேகத்தில் பயணித்தமையே இவ்விபத்துக்கான காரணம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்நிகழ்வுக்கு முன்னரும், பின்னரும் பல வாகன விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இதனைக் கருத்திற்கொண்டு, இனி வரும் காலங்களில், அதிக வேகத்துடன் பயணிக்கும் பஸ் வண்டிகள் தொடர்பிலான முறைப்பாடுகளை, 1955 என்ற தொலைபேசி இலக்கத்தோடு தொடர்புகொண்டு உடனடியாக முறையிட முடியும் என, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, பொதுமக்களைக் கேட்டுள்ளது.
( ஐ. ஏ. காதிர் கான் )
கருத்துரையிடுக