➡️ மினுவாங்கொடை நகரத்தை வர்த்தக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த தூங்காத நகரமாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள்...
➡️ நகரை அபிவிருத்தி செய்யும் போது நகரத்தில் உள்ள வயல் நிலங்கள்  உள்ளிட்ட இயற்கை சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிக்கவும்...
➡️ மினுவாங்கொடை நகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் அம்பகஹவத்த பகுதியில் இருந்து விமான நிலையம் வரை புதிய பாதை அமைக்கப்படும்...
➡️ தனியார் மருத்துவமனைகள், வாகன நிறுத்துமிடங்கள், புதிய வணிக வளாகங்கள், அரங்கங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்றவையும் கட்டப்பட்டு வருகின்றன.
➡️ நிதி ஒதுக்கீடுகளை செய்ய திறைசேரியுடன் பேச்சுவார்த்தை...
                                                      - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

மினுவாங்கொடை நகரத்தை வர்த்தக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த தூங்காத நகரமாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மினுவாங்கொட நகரத்தை நவீன உலகிற்கு ஏற்றவாறு அபிவிருத்தி செய்ய வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார்.

பத்தரமுல்லை, செத்சிரிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் இன்று (14) மினுவாங்கொடை  நகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நூறு நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மினுவாங்கொடை நகரம் ஏற்கனவே அழகுபடுத்தப்பட்டது.

மினுவாங்கொடை நகர அபிவிருத்தித் திட்டம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பட்டயப் பொறியியலாளர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்டது. நகர அபிவிருத்தியின் போது நகரில் உள்ள வயல் நிலங்கள் உள்ளிட்ட இயற்கை சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அபிவிருத்தி திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ளதால் இந்த நகரத்தின் வர்த்தக மதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.

எனவே, நகரத் திட்டத்தைத் தயாரிக்கும் போது, வர்த்தகப் பெறுமதியை அதிகரிக்கும் வகையில், கலப்பு அபிவிருத்தித் திட்டமாக மினுவாங்கொடை நகர அபிவிருத்தித் திட்டத்தை தயாரிக்கப்பட வேண்டுமென  அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார்.

மினுவாங்கொடையை தவிர்த்து மிக இலகுவாக விமான நிலையத்தை அடையும் வகையில் மினுவாங்கொடைக்கு அருகில் உள்ள அம்பகஹவத்த பகுதியிலிருந்து விமான நிலையம் வரை புதிய வீதியொன்று அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மினுவாங்கொடை நகரின் அபிவிருத்திக்காக ஒன்பது ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட வேண்டுமென நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதன்படி, தனியார் மருத்துவமனைகள், வாகன நிறுத்துமிடங்கள், புதிய வணிக வளாகங்கள், அரங்கங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்றவற்றைக் கொண்டு நகரை மேம்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

மினுவாங்கொடை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்கு உட்பட்டு, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு காணியை சுவீகரிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். மேல் மாகாண ஆளுநர், விமானப்படையின் மார்ஷல் ரொஷான் குணதிலக்கவிடம் தேவையான அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மேலும், நகரின் வளர்ச்சியில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க நீதித்துறை நடவடிக்கை விரைந்து எடுக்கும் என்றார்.

மினுவாங்கொடை நகர சபையின் தற்போதைய நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி நகர அபிவிருத்திக்கான அடிப்படைத் திட்டங்களை ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கிய அமைச்சர், தேவையான நிதி ஒதுக்கீடுகளை செய்வதற்கு திறைசேரியுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார்.

இந் நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத், நகர அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மஹிந்த விதானாராச்சி, பிரதி பணிப்பாளர் நாயகம் லலித் விஜேரத்ன, மினுவாங்கொடை நகர சபையின் முன்னாள் தலைவர் நீல் ஜயசேகர மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

முனீரா அபூபக்கர்                                                                                                                    

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.