சூடு பிடிக்கும் கந்த காடு விவகாரம் கைதிகள் சிலர் தப்பியோட்டம்



கந்தகாடு புனர்வாழ்வுத் தடுப்பு முகாமில் இருந்து சேனபுர புனர்வாழ்வுத் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்ட 218 கைதிகளில் குழு ஒன்று தப்பிச் சென்றுள்ளது.

இவர்களில் 20 பேர் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தப்பியோடிய 6 கைதிகளை மீண்டும் கைது செய்வதில் பாதுகாப்பு தரப்பினர் வெற்றி பெற்றுள்ளனர்.

தப்பியோடிய மற்ற 14 கைதிகளைக் கண்டுபிடிப்பதற்கான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நிலைமையை கட்டுப்படுத்திய பின்னர், மோதல்களில் ஈடுபடாத 218 கைதிகள் சேனபுர தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கடந்த (06) பிற்பகல் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதிகள் இரு குழுக்களுக்கிடையில் சண்டை ஏற்பட்டு பின்னர் அது மோதலாக மாறியது.

பின்னர், அவர்களில் ஒரு குழு முகாமுக்குள் உள்ள ஆயுதக் களஞ்சியத்திற்குள் நுழைய முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிலைமையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவப் படையினர் வானத்தை நோக்கிச் சுட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார்.

எனினும் மோதல் சூழ்நிலை காரணமாக 5 பேர் காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் நால்வர் கைதிகள் மற்றும் காயமடைந்த மற்றையவர் இராணுவ சிப்பாய்களாவார்கள்.

சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 211 கைதிகள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சம்பவத்தில் இருந்து இன்னும் 33 கைதிகள் காணாமல் போயுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கலவரம் வெடித்தபோது தப்பியோடிய கைதிகளைக் கண்டுபிடிக்க இராணுவமும் பொலிஸாரும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள்