நாட்டின் சட்டத்தை கவனத்தில் கொண்டு உரிய முறையில் உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அத்துடன் நாட்டின் மரபை பேணி போயா தினத்தில் உழ்கிய்யா நிறைவேற்றுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பிற சமூகத்தவர்கள் வேதனைப்படும் வகையிலோ அல்லது அவர்களுடைய உணர்வுகள் தூண்டப்படும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்றும் உலமா சபை கோரியுள்ளது.
இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வெளியிட்டுள்ள உழ்ஹிய்யா வழிகாட்டல் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பலர் ஒன்று சேர்ந்து கூட்டு உழ்ஹிய்யாவை நிறைவேற்றும் போது பேணப்பட வேண்டிய ஒழுங்குகள் பற்றிய ஜம்இய்யாவின் வழிகாட்டல் சரியாக பின்பற்றி செயற்படல் வேண்டும்.
நாட்டின் சட்டத்தை கவனத்தில் கொண்டு மிருகத்தின் உரிமைக்கான சான்றிதழ், குறித்த விலங்கு தொடர்பில் விவரச் சீட்டு, சுகாதார அத்தாட்சி பத்திரம் மிருகங்களை எடுத்து செல்வதற்கான அனுமதி பத்திரம் போன்ற ஆவணங்களை முன்கூட்டியே தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
பிராணிகளை வண்டிகளில் ஏற்றி வருவதையும் அனுமதி பெற்றதை விட கூடுதலான எண்ணிக்கையில் எடுத்து வருவதையும் முற்றிலும் தவிர்த்து கொள்ளுவதோடு மிருகங்களுக்கு எவ்வித நோவினையும் கொடுப்பது கூடாது.
நாட்டின் மரபைப் பேணும் வகையில் பௌத்தர்களால் கண்ணியப்படுத்தப்பட்ட போயா தினத்தன்று உழ்ஹிய்யா நிறைவேற்றுவதை கண்டிப்பாக தவிர்ந்துக் கொள்வதோடு ஏனைய நாட்களை இதற்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
உழ்ஹிய்யா நிறைவேற்றப்படும் போது படங்கள் அல்லது வீடியோக்கள் எடுப்பதை தவிர்த்து கொள்ள வேண்டும். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அவற்றை பகிர்ந்து கொள்வதை கண்டிப்பாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.
மேலும், நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடியை சந்தித்துள்ள இச்சூழ்நிலையில் உழ்ஹிய்யா இறைச்சியை பகிர்ந்தளிக்கும் போது அவற்றை சமைத்துண்பதற்குத் தேவையான அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் மேலதிக சதகாவாக கொடுப்பதற்கு முடியுமான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஜம்இய்யதுல் உலமாவினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது