சஜித் - IMF பிரதிநிதிகள் சந்திப்பு

 நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பைக் கோரி எதிர்க்கட்சி தலைவர் சஜித் IMF பிரதிநிதிகளை சந்திப்பு

தற்போது நம் நாட்டில் நிலவும் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஒத்துழைப்பை நல்குமாறும், இதன் நிமித்தம் எதிர்க்கட்சியாக  எந்நேரத்திலும் ஆதரவு வழங்குவதாகவும், நாட்டில் ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் நிலைநாட்டி மீண்டும் ஒரு வளமான நாடாக நிலைபெற சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்பார்ப்பதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுடன் நேற்று (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பலருடன் நேற்று (29) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் நிகழ்வொன்று இடம் பெற்றது.

எமது நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பாக விளக்கமளித்த எதிர்க்கட்சித் தலைவர்,ஒரு நாடாக மீண்டும் முன்னோக்கிப் பயணிக்கத் தேவையான ஒத்துழைப்பை  வழங்குமாறும் இதன் போது கோரிக்கை விடுத்தார்.

இருதரப்புக்கும் இடையே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த பேச்சுவார்த்தை இடம் பெற்றதோடு, நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைத் தணிக்கத் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாக சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினர் இதன் போது தெரிவித்தனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதம செயற்பாட்டு தலைவர் (IMF Mission Leaders) Peter Breuer, சிரேஷ்ட செயற்பாட்டுத் பிரதானி(Senior Mission Chief) Masahiro Nozaki மற்றும் வதிவிடப் பிரதிநிதி(Mission Chief) Tubagus Feridhanusetyawan உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கருத்துகள்