கொவிட்-19 தொற்று காலத்தில் வழமையான நாளாந்த செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்காக மாவட்டங்களை திறக்கும் காலப்பகுதியில், அரசாங்க அலுவலகங்களினால் கடைபிடிக்கப்படவேண்டிய வழிகாட்டுநெறிகள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தரவினால் சுற்றுநிருபம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சு செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேசச் செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்களின் நியதிச் சட்டச் சபைகளின் தலைவர்கள், பொது முகாமையாளர்கள் ஆகியோருக்கு குறித்த சுற்றுநிருபம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சுற்றுநிருபத்தின் முழு விவரம் பின்வருமாறு,
அரசாங்க அலுவலகங்கள்; வழமையான நாளாந்த செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு உதவுமுகமாக, தற்போது நாட்டில் விதிக்கப்பட்டுள்ள கொவிட்-19 தொடர்புபட்ட கட்டுப்பாடுகளை படிப்படியானதொரு அடிப்படையில் தளர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எனவே, அத்தகைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் புவியியற் பகுதிகளில,; பணிகளை மீள ஆரம்பிக்கும் அனைத்து அரசாங்க அலுவலகங்களும் பின்வரும் வழிகாட்டுநெறிகளை கடைப்பிடிக்கவேண்டும்:
01. வேலைத்தலத்தில் கொவிட்-19 வைரஸை தடுப்பதை உறுதிசெய்வதற்குத் தேவையான அனைத்து சுகாதார பராமரிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும்.
02. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் சமூக இடைவெளியைப் பேணுதல், முகக்கவசங்களை அணிதல், கை கழுவுதல் மற்றும் ஏனைய நடவடிக்ககைகள் தொடர்பாக கண்டிப்பான இயைந்தொழுகலை உறுதி செய்யவும்.
03. அனைத்து வேலைத்தலங்களையும், குறிப்பாக பொது வெளியிடங்கள், கரும பீடங்கள், பணி அமைவிடங்கள், உணவறைகள், தேநீர் அறைகள், சிற்றுண்டிச்சாலைகள், கழிவறைகள் மற்றும் வேறு பகிரப்படும் வெளியிடங்கள் ஆகியவற்றை எப்போதும் சுத்தமானதும் சுகாதாரமானதுமான ஒரு நிலையில் பேணவும்.
04. பொது மக்கள் அடிக்கடி வருகைதரும் வேலைத்தலத்தில் பொருத்தமான இடங்களில் செனிட்டைசிங் ஹேண்ட் ரப் டிஸ்பென்சர்கள் வசதிகளை வழங்கவேண்டும்.;
05. பின்பற்றப்பட வேண்டிய சுகாதாரப் பராமரிப்பு மற்றும் துப்பரவு பற்றிய வழிகாட்டுநெறிகள் தொடர்பான தகவல்களை வழங்கும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கமான அறிவிப்புகளை தெளிவாகக் காட்சிப்படுத்தவும்.
06. வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுள்ள வேலைத்தல மற்றும் அலுவலக வளாக சுகாதாரப் பராமரிப்பு பற்றிய வழிகாட்டுநெறிகள் நிர்மாணக் கருத்திட்டங்களின் அமுலாக்கத்தின்போது நிலைநாட்டப்படவேண்டும்.
07. வேலைத்தள கூட்டங்களை இன்றியமையாத பங்குபற்றுநர்கள் மாத்திரம் சமுகதமளித்திருக்கும் வண்ணம் முகாமைத்துவம் செய்யவும் அல்லது குறைந்த எண்ணிக்கையிலானோர் கலந்துகொள்ளும் வண்ணம் கூட்ட பங்குபற்றுநர் எண்ணிக்கயைக் குறைக்கவும்.
08. சாத்தியமானபோதெல்லாம் தொலைவிலிருந்து பணிபுரிதலையும் வேலைத்தலத்தில் ஆட்கள் நிரம்பியிருப்பதை முடிந்தவரை குறைப்பதையும் ஊக்குவிக்கவும்
09. அனைத்து மாவட்டங்களிலும் பாடசாலைகள், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் வாழ்க்கைத்தொழில் கல்வி நிறுவனங்கள் ஆகியன மூடப்பட்டிருக்குமெனினும், தொலைக் கற்றல் முறைமை மற்றும் தொலைவிலிருந்து பணியாற்றும் ஏற்பாடுகள் மூலம் இயங்கும்
10. வேலையோடு தொடர்புபட்ட அத்தியாவசியமற்ற பயணங்களை நிறுத்திக் கொள்ளவும். இன்றியமையாத பயணங்களை மேற்கொள்ளவேண்டியுள்ள ஊழியர்கள் குறிப்பிட்ட புவியில் பகுதிகளில் நிலவும் ஒழுங்குவிதிகளுக்கு இயைந்தொழுகுமாறு அவர்களுக்கு அறிவுரை வழங்கவும்.
11.ஊழியர்கள் கட்டங்கட்டமாக வேலைக்குத் திரும்பவதற்கான பொறிமுறையொன்றைத் திட்டமிட்டு அமுல்படுத்தவும்.
12. ஆரம்பத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பணியாளர்களோடு அரசாங்க அலுவலகங்கள் வழமையான அலுவலக பணிகளை மீள ஆரம்பிக்கவேண்டும். ஒவ்வொரு நிறுவனத் தலைவரும் இக்காலப்பகுதியில் வேலை முறைமை தொடர்பாக விசேட அறிவுறுத்தல்களை விடுக்கவேண்டும்.
13. கொழும்பு, கம்பஹா, களுத்துறை; புத்தளம் மாவட்டங்களிலும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனையின் பேரில் பாதிப்புறத்தக்க மாவட்டங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட வேறு ஏதேனும் மாவட்டங்களிலும் உள்ள அரசாங்க அலுவலகங்கள் ஆரம்பத்தில் ஒரு சுழற்சி அடிப்படையல் 20சதவீத ஊழியர்கள் வேலைக்கு சமுகமளிக்கும் வகையில் இயங்கவேண்டும்.
மேலே குறிப்பிடப்பட்டவாறு, ஊழியர்களைத் தெரிவு செய்வதற்கு நிறுவனத் தலைவர்கள் பொருத்தமான எடுகோள்களைக் கடைப்பிடிக்கலாம்.
(Tamil Mirror)